Date: 25.12.2024 – Wednesday – 9.05 – 9.50 a.m.
Speaker : Sangita Kala Acharya Dr RS Jayalakshmi
Title : Notations for Niraval by Sangita Kalanidhi Kallidaikurichi Vedanta Bhagavatar
Abstract :
சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதரின் “பல்லவி, ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம்” அடங்கிய கையெழுத்து பிரதி ஒன்று மஹாதேவ பாகவதரால் எழுதப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் அவர்கள் சுப்பராம தீக்ஷிதர் அவருடைய மகன் அம்பி தீக்ஷிதரிடம் பயின்றவர். இவர் 1936 “சங்கீத தத்வ ப்ரதர்ஷினி” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதில், கல்யாணி ராகத்தில், ஆதிதாளம் 8 களையில் “தேவசேனாபதே” என்ற பல்லவிக்கு நிரவலும், கல்பனாஸ்வரமும் கொடுத்துள்ளார்.
நான் எடுத்துக்கொண்டுள்ள கையெழுத்து பிரதியிலும், சங்கராபரணத்தில் ஆதி தாளம் 8 களையில் “மந்தஹாஸ வதனா ஹரே க்ருஷ்ணா” என்ற பல்லவிக்கு ஏறத்தாழ 120 ஆவர்த்தம் நிரவல் கொடுத்துள்ளதுடன், இதே பல்லவியை ஆனந்தபைரவி, சஹானா, அடாணா போன்ற ராகங்களில் 4 களை ஆதியாக அமைத்து நிரவலும், ஸ்வரமும் கொடுத்துள்ளார்.
இதைத்தவிர, பைரவியில் 8 களை ஆதியில் “மாமதுரை மீனாக்ஷி அம்பா தேவி" என்ற பல்லவிக்கு நிரவல், ஸ்வரம், தோடியில் “கான லோல கருணாலவால” என்ற 4 களை (ஆதி) பல்லவிக்கு நிரவல், காம்போதியில், “பரிமள ரங்கபதே” என்ற ஆதி 2 களை பல்லவிக்கு நிரவல் கொடுத்துள்ளார். காம்போதி, பேகடா ராகங்களுக்கு ஆலாபனையும் கொடுத்துள்ளார். இவற்றைப் பார்ப்பதன் மூலம், எல்லா ராகங்களிலும் பல்லவிக்கு நிரவல் எப்படி பாடப்பட்டன
என்பதை அறிவதுடன், இந்த ராகங்களில் எப்படிப்பட்ட பிரயோகங்கள் இருந்தன என்பதையும் அறியமுடிகிறது. முக்கியமாக, ஆதி 8 களை நிரவலில், திஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சதுஸ்ரம் மற்றும் சங்கீர்ணம் ஆகிய ஸ்வர தொகுப்புகளை எப்படி அமைத்துள்ளார் என்பது மிகவும் புதுமையாக இருப்பதுடன், இப்படியும் நிரவல் பாடப்பட்டு வந்ததா என்ற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.
ஆகையால், இந்த ஆய்வின் முடிவுகள் இசை மாணவர்களுக்கும், ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், இசை ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த பயிற்சி முறையை அறிய ஏதுவாக இருக்கும். இந்த புத்தகத்தில் (கையெழுத்து பிரதி) உள்ள நிரவல் சங்கதிகளைப் பாடி ஒரு document செய்துவைத்தால் எதிர்காலத்தில் வருகின்ற இசைச் சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.